வியாழன், 21 அக்டோபர், 2010

காவலன் விஜய்க்கு கவுண்டமணி அட்வைஸ்!


நண்பர்களே..கீழ்கண்டவை அனைத்தும் கற்பனையே...விஜய்யும் கவுண்டரும் நண்பர்கள் போல பேசிக்கொள்வதால் சற்று மரியாதை குறைவாக இருக்கும் விஜய் ரசிகர்கள் பொறுத்தருள்க.அப்புறம் தமிழ்மணம் கருவிப்பட்டை ரொம்ப நாளைக்கு பிறகு வேலை செய்கிறது எனவே பதிவு பிடித்திருந்தால் உங்கள் பொன்னான வாக்குகளை அள்ளி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..
விஜய் நடிக்கும் காவலன் ஷூட்டிங் ஸ்பாட்.அங்கு எண்டர் ஆகிறார் எள்ளல் நாயகன் ,நகைச்சுவை பேரரசு கவுண்டமணி...
ஹாய்..ஹாய்..ஹாய் எவரிபடி....’’
கவுண்டரை பார்த்ததும் ஆர்வமுடன் ஓடி வந்து சூழ்ந்து கொண்ட..டெக்னீசியன்கள்,தொழிலாளர்களை விலக்கிக்கொண்டு,விஜய் கேரவேனை நோக்கி செல்கிறார்,அதே நேரம் கேரவேனை விட்டு இறங்கிய விஜய் ய்யும் கவுண்டரை பார்த்து ஷாக் ஆகி..இந்தாளு எங்க இங்க வந்தார் என நினைக்கிறார்..விஜய்யை நெருங்கிய கவுண்டர்,
ஹல்லோ..போலீஸ்கார் குட்மார்னிங்?
வாங்கண்ணே..என்னது போலீஸ்கார்னு சொல்றீங்க..நான் இதுல செக்யூரிட்டிண்ணே...’’
அட..காவலன் னா போலீஸ்கார் தாம்பா..அப்போ நீ போலீஸ்சா நடிக்கலையா..செக்யூரிட்டியா..எப்படி...உன் இமேஜ் என்னாவறது..உங்கப்பன் டைரடக்கரு ஒத்துக்க மாட்டானே...’’
கதை நல்லாருந்துது..சரின்னுட்டார்’’

ஹே..பார்த்தியா நம்மகிட்டிய டகால்டி காமிக்கிறியே..அப்பனும் மவனும் என்னிக்குடா கதைய பார்த்தீங்க..வேற வழியில்ல..ஹிட் வேணும் னு ஒத்துக்கிட்டீங்க..பாலிஸா பேசியே..பதிவிசா அலையறிங்கடா..
’’
’’மெதுவா பேசுங்கண்ணே..எனக்குன்னு இமேஜ் இருக்கு..இன்னும் கோயமுத்தூர் ஷூட்டிங்க்ல பார்த்த விஜய் யாவே நினைக்காதீங்க..

ஓஹோ..இப்ப பெரிய ஆளாயிட்டியா...ரஜினியே என்ன பார்த்தா பம்முவாரு..நீ என்ன பிஸ்கோத்து...பின்னாடி ஏதாவது முளைச்சிருக்கா..எங்க திரும்பு பார்க்கலாம்..ஒண்ணும் காணமே...அப்புறம் என்ன...’’
உடம்பு சவுரியமெல்லாம் எப்படிண்ணே....’’

’’
அட..அத விட்டு தள்ளு கழுதை...ஆமா கோயமுத்தூர் மாப்ள ல நாம இரண்டு பேரும் ஜோடி போட்டு தாக்கு தாக்குன்னு தாக்குனோம்..சங்கவிய நீ தாக்கு தாக்குன்னு தாக்குன..அதையெல்லாம் இப்பவும் நினச்சு பார்த்தா குளுகுளு நு இருக்குது..’’

அட..என்னெண்ணே..நீங்க...அதையேல்லாம் நினெச்சுகிட்டு....’’
அட..என்னெண்ணே..நொண்ணேணேன்னுட்டு...மாப்ள..மாம்ஸ் னு கூப்பிடுப்பா..நாம எல்லாம் யூத்துப்பா....ஏம்பா...நம்ம ஜோடி காம்பினேசன் உனக்கு பிடிக்கலையா...’’

அது இல்லண்ணே..சங்கவி மேட்டர சொன்னேன்..
’’
சரி..சரி..இன்னிக்கு கிடைச்ச பிரியாணிய சேதாரமில்லாம சாப்பிடப்பார்க்கணும்..நேத்து சாப்பிட்ட பழைய சோறை மறந்துடணும்னு சொல்ற...புரியுது ..யூ கண்டினியூ...போட்டு தாக்கு...’’அப்புறம் அசின் அக்கா என்னா சொல்றாங்க..உர்ர்ர்ராசினியா ..ஓ..நீதான் சிவகாசியிலியே உராசு உராசுனு உரசிட்டியே....’’

ஹஹஹா..குறும்பாவே பேசாதீங்கண்ணே...எனக்கு படம் ஜெயிக்கணும்கிறதுதான் கவலையே....என் கவனமெல்லாம் அதுலதான்
’’
’’ச்சே..என்னப்பா..அசிங்க,அசிங்கமா பேசற..நாம என்னிக்கு படம் ஓடறத பத்தி கவலப்பட்டோம்..படம் ஓடுனா என்ன..பணம் போட்ட அந்த மொன்ன நாயி செத்தா நமக்கு என்ன..பேமண்ட் கொடுத்துட்டானா இல்லையா..கறுப்பு வெள்ளை பிரிச்சி வாங்கிட்ட இல்ல...ஓப்பனிங் சாங்,நாலு ஃபைட்,நாலு பாட்டு...தங்கச்சி பாட்டு,ஆத்தாகாரி பாட்டு எல்லாம் வெக்க சொல்லிட்டீல்ல..அரசியலுக்கு தோதா பில்டப் சீன் வைன்னு உங்கப்பன் டைரக்டரை கூப்பிட்டு மிரட்டினானா இல்லையா,சந்தானத்துக்கிட்ட ரெண்டு பிட்டு,விட்டு நடிக்க சொல்லி வாங்கிட்டியா’’

எல்லாம் பக்காண்ணே..
’’

அப்புறம் என்ன..அடுத்த படம் ..அடுத்த பேமண்ட்..அனுஸ்கா,தமனா னு போக வேண்டியதுதானே..
நம்ம ரசிக குஞ்சுமணிகளுக்கு நாலு குத்துப்பாட்டு,நாலு ஃபைட் இருந்தா போதும்..கோயமுத்தூர் மாப்ள.எனக்காகத்தான் ஓடுச்சுன்னு நியூஸ் வந்ததுக்கப்புறம் எந்த காமெடி நடிகனையும் நீ அண்டவே விடறதில்லைனு கேள்விப்பட்டேன்..வடிவேலு சீனை கூட ஒண்ட வெட்டிற சொல்லுறியாம்.இதெல்லாம் தப்புப்பா..ரஜினி ஆகணும்னு நினெக்கிற ரஜினி குணத்தையும் ஃபாலோ பண்ணனும்..நல்ல டைரக்டர்,நல்ல காமெடியன்..டைரக்டர் சொல்றதை மட்டும் கேட்டு செய்றதுன்னு இருந்தா நீயும் இன்னும் பெருசா வரலாம்பா..’’

சரிண்ணே..பேரன்,பேத்தியெல்லாம் எப்படி இருக்காங்க..?
’’

கவுண்டர் மனதிற்க்குள்(பேச்சை எப்படி மாத்துறாம் பாரு..நல்லது சொன்னா கேட்க மாட்டியே..உன் ரூட்லியே வர்றேன்..)

பேரன்,பேத்தியெல்லாம் நல்லா இருக்காங்கப்பா..அவங்க குறும்பு பண்ணும் போதெல்லாம் வில்லு பிரஸ் மீட்ல..ஷட் அப் நு நீ கத்துவியே...அந்த வீடியோவை போட்டு காட்டுவேன்..பொடுசுங்க அப்படியே கப்பு சிப்புனு அடங்கிரும்...இது பரவாயில்லை ..என் ஃப்ரெண்ட் ஒருத்தன் கடன்காரங்களை சமாளிக்கிறதுக்கு அந்த வாய்சைத்தான் காலர் டியூனா வெச்சிருக்கானாம்.ஃபோன் பண்ற கடன்காரங்க...டரியல் ஆயிடுறானுங்களாம்...’’

விஜய் சுதாரித்துக்கொண்டு,டேய்..அண்ணனுக்கு ஆரஞ்ச் ஜூஸ் கொடுறா சரிண்ணே
...நேரமாச்சு....ஷூட்டிங் போறேன்’’

ஓகேம்மா...
’’

கவுண்டரும் கிளம்புகிறார்..என்னமோ ஷூட்டிங் கிறானுக..வேலைங்கிறானுக..ஒரே குஸ்டமப்பா...சரி அடுத்து யாரை பார்க்கலாம் என சிந்தித்தபடியே செல்கிறார் கவுண்டர்...

வியாழன், 9 செப்டம்பர், 2010

பாஸ் என்கிற பாஸ்கரன் இசை விமர்சனம்


 ‘சிவா மனசுல சக்திஎன்ற வெற்றிகரமான பொழுதுபோக்கு படத்தை இயக்கிய இயக்குனர் ராஜேஷ்இயக்கத்தில் உருவாகியிருக்கும் நகைச்சுவையான காதல் படமே பாஸ் என்கிற பாஸ்கரன்’! இப்படத்தின் நாயகனாக ஆர்யாவும், அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் நடித்திருக்கின்றனர். சிவா மனசுல சக்திபடத்தில் தனது நகைச்சுவை மூலம் ரசிகர்கள் வயிற்றை புண்ணாக்கிய சந்தானம், இப்படத்திலும் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த காத்திருக்கிறார்.
KS ஸ்ரீநிவாசனின் ‘Vasans Visual Ventures’ நிறுவனம், ஆர்யாவின் ‘The Show People’ நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. முதலில் ஆர்யா வெளியிடுவதாக இருந்த இப்படம், தற்பொழுது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட்நிறுவனத்தால் வெளியிடப்பட உள்ளது. மிகவும் பிஸியான, தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர்களுள் ஒருவருவரான, யுவன்சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
தனது எதிர்காலத்தைப் பற்றியோ, தனது சொந்த வாழ்க்கையைப் பற்றியோ கவலைப்படாது, மற்றவர்களுக்காக வாழும் பாஸ்கரன்என்ற இளம் நாயகனனின் வாழ்கை, அழகானதொரு இளம் பெண்ணின் சந்திப்பிற்குப் பின் எவ்வாறு மாறுகிறது..?(எல்லாம் காதல் ஜாலம் தான்!?) என்பதை பாஸ் என்கிற பாஸ்கரன்படம் பிடித்து காட்டியிருக்கிறது.

1.அட பாஸ் பாஸ் சத்யன்
அறிமுகப் பாடல்!! ஆர்யாவின் ரசிகர்களை குஷிபடுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. சத்யனின் குரல், வேகமான இசையுடனும், பாடலின் சூழ்நிலையுடனும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. இருப்பினும் புதுமை மட்டும் இல்லை?! வேல் படத்தின்கோவக்கார கிளியேபாடலின் மறுபிரதி போல உள்ளது. என்னாச்சு யுவன.???
2.யார் இந்த பெண்தான் ஹரிசரண்
மென்மையான, இனிமையான இசையுடன், ஹரிசரணின் குரலும் அழகாக விரவி வந்து உடனடியாக மனதை கவர்கிறது. தந்தி இசை கருவிகளின் உதவியுடன், பாடலின் பின்னணி இசையை யுவன் அருமையாக அமைத்திருக்கிறார். ஏற்கனவே கேட்டது போல் தோன்றாமல், மனதிற்கு புதுமையான உற்சாகத்தை ஊட்டுகிறது. பாடலை கேட்கும்போது, ‘யாரடி நீ மோகினியின்’, ‘எங்கேயோ பார்த்த..பாடலை போல் படமாக்கப் பட்டிருக்கலாம் என தோன்றுகிறது




3.தத்தி தாவும் பேப்பர் நான் கார்த்திக்
கேட்பதற்கு குளுமையான பாடல்! தத்தாரே த த தாஎன்ற ஹம்மிங்குடன் பாடல் துவங்குவதிளிருந்து, இறுதிவரை கேட்பதற்கு இனிமையானதாகவே அமைந்திருக்கிறது. கார்த்திக்கின் இயல்பான பாடும் விதம் பாடலுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. இப்பாடலில் யுவன் மீண்டும் தனது திறமையை நிரூபித்திருக்கிறார். பட்டியல் படத்தின்ஏதோ ஏதோ எண்ணங்கள்பாடலை போன்ற இப்பாடலும் நிச்சயம் வெற்றி பெரும். பாடல் வரிகளில், ‘ஹீரோ ஹோண்டா’, ‘சிகரட் பாக்கெட்’, ‘ஜீரோ பக்கத்தில் கோடுதான் போடுற’,’மரேஜ் பண்ண தேவலைபோன்ற வித்யாசமான, புதிய வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன.
4.அயிலே அயிலே விஜய் பிரகாஷ்
காதல் அணுக்கள்பாடலின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த விஜய் பிரகாஷ் இந்த ஜாலியான பாடலை பாடியுள்ளார். இப்பாடல் புகைவண்டியில் வைத்து பாடப்படுகிறதா..? இல்லை பாடலின் தோணி புகைவண்டியில் இருப்பது போன்ற உணர்வை நமக்கு அளிக்கிறதா..? என்று கணிக்க முடியவில்லை. இப்பாடல் யுவனின் மற்றொரு மாயஜாலம்..! மேலிருந்து கொட்டும் அருவி போல தங்குதடையின்றி, இசை, சந்தங்கள், எதிரோலிப்புகள் பாடல் முழுவதும் பவனி வருகின்றன. பாஸ் என்கிற பாஸ்கரன்படத்தின் சிறந்த பாடலாக இப்பாடலை தேர்ந்தெடுக்கலாம்.

5.மாமா மாமா விஜய் யேசுதாஸ், ஸ்வேதா மோகன்
மாமா மாமா உன் பொண்ண குடு மாமாஎன பாடலின் முதல் வரியை கேட்கும்போது, சூப்பர்ஸ்டாரின், ‘மாமா உன் பொண்ண குடுஎன்ற ராஜாத்தி ராஜாபட பாடல் ரீமிக்ஸ்செய்யப்பட்டிருக்கிறதோ என எண்ணத்தோன்றுகிறது. யுவன் ரீமிக்ஸ்பாடல்களை எளிதாக கையாள்வார் என்ற போதிலும், இப்பாடலின் இசை சற்று வித்தியாசமானதாக அமைக்கப் பட்டிருக்கிறது. இருப்பினும் பாடலை கேட்கும்போது தாஸ் படத்தின். வா வா வா, நீ வராங்காட்டி போ..பாடலை நினைக்காமல் இருக்க முடியவில்லை. ஸ்வேதா மோகனின் குரல் பாடலுடன் இயல்பாக ஒன்றியிருக்கிறது.


பொதுவாக யுவனின் இசையில் டூயட்பாடல்களை அபூர்வமாகவே காண முடியும். பானா காத்தாடியில் ஒரு டூயட்பாடல் மட்டுமே இடம்பெற்றிருந்த போதிலும் கடைசியாக வந்த தில்லாலங்கடி, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்என இரண்டு படங்களிலுமே குறிப்பிடத் தகுந்தடூயட்பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஒரு படத்திற்கு தேவைப்படுவதால் அதிக அளவில் தனிப் பாடல்கள் இடம்பெறுகின்றனவா? அல்லது ரசிகர்களது விருப்பம் அவ்வாறாக உள்ளதா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இருப்பினும் தனிபாடலானாலும், டூயட் பாடல்களானாலும், “சிறந்த பாடல்களைரசிகர்கள் எப்பொழுதும் ரசிக்க தவறுவதேயில்லை!!!

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

அவதார் - ஒரு பார்வை



பன்னிரண்டு வருட வனவாசத்திற்குப் பிறகு, ஜேம்ஸ் கேமரூன் மீண்டும் வெள்ளித்திரையில் பிரவேசம் செய்கிறார். டைட்டானிக், அபைஸ் போன்ற படங்களின் மூலம், 'பிரம்மாண்டம் என்றால் இதுதான்' என்று எடுத்துக் காட்டிய ஜேம்ஸ், பதினைந்து வருடங்களுக்கு மேல் உழைத்து, தன் அடுத்த திரைப்படமான 'அவதார்'-ஐ உலகிற்கு அர்ப்பணம் செய்திருக்கிறார். ஒரு சிறு குழந்தையை வளர்ப்பது போல, இத்திரைப்படத்தையும் பேணிக் காத்து உருவாக்கியிருக்கின்றார் மனிதர். 

Jake1997ல் வெளிவந்த டைட்டானிக்கைத் தொடர்ந்து, இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிப்பதாக இருந்ததாம். ஆனால் ஜேம்ஸ், 'இப்படத்திற்கு வேண்டிய அளவிற்கு தொழில்நுட்ப சக்தி தற்போது இல்லை' என்று சொல்லிவிட்டாராம். அப்படி என்ன தொழில்நுட்ப வளர்ச்சி வேண்டியிருக்கின்றது என்று யோசிக்கிறீர்களா? இப்படத்தில் உபயோகப்படுத்தியுள்ள தொழில்நுட்பத்தைப் பற்றி மட்டுமே ஒரு முழு கட்டுரையை எழுத முடியும். 

சுருக்கமாகச் சொன்னால், கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் உலகிற்கு ஒரு புது உபாயத்தை வடிவமைத்திருக்கின்றார். கண்களால் எப்படி எல்லாம் பார்க்க முடியுமோ, அப்படியெல்லாம் இயங்கும் ஒரு கேமரா சாதனத்தையும் வடிவமைத்திருக்கின்றார். குறிப்பாக, முப்பரிமாணத்தோடு (3D) எடுக்கப்படும் திரைப்படங்களில் இவ்வம்சம் முக்கிய பங்கு பெறும். அதோடு மட்டுமல்லாமல், ஸ்டீவன் ஸ்பீல்பர்க், பீட்டர் ஜாக்ஸன் போன்ற புகழ்பெற்ற இயக்குனர்களைத் தன் இடத்திற்கு அழைத்து, தன்னுடைய புது கம்ப்யூட்டர் இயந்திரங்களைக் காட்டி, அவர்களையும் அதைப் பரிசோதிக்கச் சொல்லியிருக்கிறார். ஸ்பீல்பர்கும், ஸ்டார் வார்ஸ் புகழ் ஜார்ஜ் லூகஸும் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்குச் சென்று, அவ்வியந்திரங்களை கேமரூன் இயக்குவதைக் கண்டு ரசித்திருக்கின்றார்கள். ஜேம்ஸின் முயற்சி, கம்ப்யூட்டர் க்ராஃபிக்ஸ் துறையில் ஒரு மாபெரும் முன்னேற்றம் என்று புகழ்பெற்ற வல்லுனர்களால் கருதப்படுகிறது. 

சரி! இத்தனை நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு 'அவதார்' படத்தில் என்னதான் செய்திருக்கின்றார்! 'பண்டோரா' என்றொரு கற்பனைப் பிரதேசத்தை மிக மிக அற்புதமாக வடிவமைத்திருக்கின்றார் ஜேம்ஸ்! உண்மையில் பண்டோரா என்பது பூமியிலிருந்து வெகு தூரத்தில் எங்கோ இருக்கும் இன்னொரு உலகத்தின் நிலா. அங்கிருந்து பார்த்தால், அதனுடைய உலகம் உருண்டையாகத் தெரியும். அது பூமி அல்ல, பூமியிலிருந்து ஆறு வருடம் பிரயாணம் செய்து அடையும் இன்னொரு உலகம். பண்டோரா என்பது அவ்வுலகத்தின் நிலா! ஆம், படம் முழுவதும் பண்டோராவிலேயேதான் நடக்கிறது. தியேட்டருக்குச் சென்ற சில நிமிடங்களிலேயே நம் பூமியை தானாகவே மறந்து விடுவோம். ஆறு வருடப் பயணமில்லாமல், நொடிகளில் பண்டோராவிற்கு நம் மனம் சென்று விடும்.

நாம் நிறைய அறிவியல் புனைவு படங்களைப் பார்த்திருப்போம். அவற்றில் எல்லாம், வேற்று கிரகங்களைக் காட்டும் பொழுது, அவ்விடமே ஏதோ இருட்டாக இருப்பதுபோலும், வேற்று கிரகவாசிகளெல்லாம் ஏதோ இயந்திரங்களைப் போல் இருப்பதுபோலும், அவ்வுலகங்கள் நம்மைவிட பல மடங்கு வளர்ச்சி கண்டது போலுமே பார்த்திருப்போம். இவை எதுவுமே பண்டோராவில் கிடையாது. ஜேம்ஸின் உலகம் மிக மிக பசுமையான இடம். எத்தனை பசுமை என்றால் - நம் பூமி உருவாகிய சமயத்தில் எப்படி இருந்திருக்குமோ, அதை விட நூறில்லை, ஆயிரமில்லை, லட்சம்-கோடி மடங்கு பசுமை!! அங்கிருக்கும் ஒவ்வொரு மரமும் சுற்றியிருக்கும் அத்தனை மரங்களுடன் ஏதோ பேசிக்கொண்டே இருக்குமாம்! இவ்வதிசயத்தைக் கண்டு, அதனைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காகவே க்ரேஸ் அகஸ்டின் எனும் பெண் பூமியிலிருந்து பண்டோராவிற்கு செல்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! 



ஜேம்ஸ் செய்திருப்பதையெல்லாம் பார்த்தால் வியப்பு மட்டுமே மிஞ்சுகிறது. அங்கு வாழும் மனிதர்களை - 'நாவி' மக்கள் எனப்படுவோரை - அவரே வடிவமைத்திருக்கின்றார். அவர்கள் பேசும் பாஷை ஒன்றை, பால் ஃப்ரோமர் (இவர் மொழிக்கலையில் தேர்ந்தவர்) என்றவரின் உதவி கொண்டு ஜேம்ஸ் உருவாக்கியிருக்கிறார். ஒரு பாஷையை உருவாக்குவதென்றால் அத்தனை சுலபம் அன்று! அது மட்டுமில்லை, அவர்களின் பழக்க வழக்கங்கள், காலை முதல் மாலை வரை அவர்கள் என்ன செய்வார்கள், அவர்களுடைய கடவுள் நம்பிக்கை என்று எல்லாத் துறைகளைப் பற்றிய விவரங்களையும் ஜேம்ஸ் உருவாக்கியிருக்கின்றார். 

பண்டோராவில் இருக்கும் இயற்கை அம்சங்கள், அங்கு வாழும் மிருகங்கள் என்று ஒரு புது உலகத்தை அத்தனை அழகாய் வடிவமைத்திருக்கிறார் ஜேம்ஸ். இயற்கை என்றால் அதுவன்றோ! எத்தனை நீர்வீழ்ச்சிகள் - எண்ணினால் கோடிக்கு மேல் இருக்கலாம்! எத்தனை மரங்கள் - அவை அனைத்தும் இரவில் ஒளி தரும் பொழுது, நம் மனதில் ஒரு இன்பம் பூக்கிறதே, அப்பப்பா!! அந்தரத்தில் தொங்கும் மலைத்தொடர் - அதைப் பார்க்கும் பொழுது, 'நாமும் இங்கு செல்ல மாட்டோமா' என்று தோன்றுகிறதே! படம் முடிந்து, தியேட்டருக்கு வெளியே வந்தவுடன்தான் நம் மூளை வேலை செய்ய ஆரம்பித்து, 'நீர் பார்த்தது இன்னொரு உலகம் அல்ல, கம்ப்யூட்டரில் அமைக்கப்பட்ட கிராஃபிக்ஸ் காட்சிகள்!' என்று சொல்கிறது! நாமும் 'அப்படியா' என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வோம்! அத்தனை கனக்கச்சிதம்! நம் இதயத்தை அம்சமாக கவர்ந்துவிட்ட பண்டோராவை உருவாக்கிய ஜேம்ஸ், மாபெரும் வெற்றி பெற்றுவிட்டார் என்றுதானே சொல்ல வேண்டும்! 

நாவி மக்கள் - நீல நிறம், சப்பை மூக்கு, சராசரியாக பத்துப் பன்னிரண்டு அடி உயரம், பெரிய வால், வாலின் நுனியில் தன் உடலை இயற்கையுடன் ஒன்றிணைக்கக் கூடிய மாபெரும் சக்தி! மற்றபடி அவர்கள் பார்ப்பதற்கு மனிதர்களைப் போலவேதான் இருப்பார்கள். படத்தில் 'அவர்களுக்கு நமக்கும் டி.என்.ஏவில் அத்தனை வித்தியாசம் இல்லை' என்று சொல்லும் வசனம் கூட உண்டு. ஆனால், அவர்கள் வாழ்க்கைக்கும் நம் வாழ்க்கைக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. நம்மைப் போல் காலை எழுந்து, ஆஃபீஸுக்குச் சென்று, மாலை வீடு திரும்பும் இயந்திர மக்கள் அல்ல. அவர்கள் இயற்கையை ரசிப்பவர்கள். தொழில்நுட்ப ரீதியில் நம்மை விட மிகக் குன்றிய வளர்ச்சி அடைந்தவர்கள். துப்பாக்கி, குண்டு என்றால் என்னவென்றே தெரியாதவர்கள். மனிதர்களைக் கண்டு பயம் கொள்பவர்கள். படத்தில் கூட, அவர்கள் மனிதர்களை 'sky people' என்றே அழைக்கிறார்கள். 



]


அவர்களுக்கு வீடுகளெல்லாம் கிடையாது. அடர்ந்த காட்டிற்கு நடுவில் ஒரு பெரிய (மிக மிக மிகப் பெரிய) மரத்தில் குடித்தனம் செய்பவர்கள்.நம் ஊரில் விமானம் பறக்கும் உயரத்தை விடவும் உயர்ந்ததாக அம்மரம் இருக்கும். அம்மரத்தையும், சுற்றியுள்ள இயற்கையையும் தெய்வமாக பாவிப்பவர்கள். 'எய்வா' என்றொரு முக்கியமான மரத்தை - பண்டோராவின் மொத்த இயற்கையையும் இணைக்கும் மரத்தை - கடவுளாக நினைப்பவர்கள். சூதுவாது அறியாதவர்கள், எல்லோரும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள். 

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், ஜேம்ஸ் ஒரு யுடோபியாவை (Utopia என்றால் Idealistic world - எல்லாமே நெறி தவறாமல் நடக்கும் ஒரு கற்பனை உலகம்) உருவாக்க முயற்சி செய்திருக்கிறார் என்றே தோன்றுகின்றது. இதற்கு நேர்மாறாக ஏதேனும் இருக்க வேண்டுமே! உருவாக்க வேண்டுமா என்ன? அதுதான் நாம் மனிதர்கள் இருக்கின்றோமே! அதனால் நம்மையே படத்தின் வில்லனாக ஆக்கி விட்டார் ஜேம்ஸ்!! படத்தின் கதைக்கு வருவோமே.

2154
ல் நடக்கின்றது இக்கதை. மனிதர்கள் தொழில்நுட்பத்தில் இன்னும் பல மடங்கு முன்னேறி விட்டார்கள். வேற்று கிரகங்களுக்குச் சென்று அங்கு என்னவெல்லாம் இருக்கிறதென்று தேடி அறிந்து கொள்ளும் அளவிற்கு வளர்ந்து விட்டார்கள். மேலே குறிப்பிட்டுள்ள நாவிகள் வாழும் மரத்தின் கீழ், விலை உயர்வான, கிடைப்பதற்கரிய ஓர் உலோகம் இருக்கிறது என்று மனிதர்கள் அறிந்து கொண்டு விட்டார்கள். அதற்கு Unobtanium என்று பெயர். (டிக்ஷனிரியில் இல்லாத இவ்வாங்கில வார்த்தையின் பொருளே 'கிடைப்பதற்கரியது' என்பதுதான்.) அதனால், நாவி மக்களின் வீடாக, தெய்வமாக வணங்கும் அம்மரத்தை இடித்து, கீழே உள்ள உலோகத்தை எடுத்துக்கொண்டு பூமி திரும்ப வேண்டும் என்பது மனிதர்களின் திட்டம். அவர்களுக்கு இந்நாவி மக்கள் எல்லோரையும் ஒரேயடியாகக் கொன்றுவிட வேண்டும் என்று ஆசை. ஆனால், இயற்கை ஆராய்ச்சி செய்யும் க்ரேஸ் அகஸ்டீன், நாவிகளுடன் தாம் பேசிப் பழகி அவர்களை அவ்விடத்தைக் காலி செய்ய வைப்பதாக உறுதி கூறுவதால் மனிதர்கள் நாவி வேட்டையைத் தொடங்கவில்லை. Pandora

எப்படி பேசிப் பழகுவது? பண்டோராவில் இருக்கும் காற்றை மனிதர்களால் சுவாசிக்க முடியாதே! அதனால் நாவிகளைப் போலவே ஒரு உடம்பை உருவாக்கி (Genetic Engineering மூலம்), அதில் மனிதரின் 'ஆவியை' புக வைக்கும் கருவியை தயார்படுத்துகிறார்கள். 'கூடு விட்டு கூடு பாய்வது' போல நினைத்துக் கொள்ளுங்களேன்! க்ரேஸ் தலைமையில் இயங்கும் இக்குழுவின் பெயர் 'அவதார் புரோக்ராம்'. இக்குழுவில் இருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும், அவருக்கென்றே தயார் செய்யப்பட்ட நாவி உடம்பு ஒன்று உண்டு. அதுதான் அம்மனிதருடைய 'அவதார்'. ஒரு வழியாகப் படத்தின் தலைப்பிற்கான காரணத்தைக் கண்டுவிட்டோம்! 


படம் ஆரம்பிக்கும் சமயத்தில், இது போன்ற சில 'அவதார்கள்' நாவி மக்களுடன் நட்பு கொண்டாடி, அவர்கள் பாஷையைக் கற்றுக் கொண்டு, அவர்களுக்கும் கொஞ்சம் கொஞ்சம் ஆங்கிலம் கற்றுக் கொடுத்து, அவர்தம் முயற்சிகளில் கொஞ்சம் வெற்றி பெற ஆரம்பித்துவிட்டார்கள். நாவிகளை அம்மரத்திலிருந்து காலி செய்ய வைக்க முடியும் என்ற நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்துவிட்டது.

படத்தின் முதல் காட்சி - 'அவதார்' குழுவில் பங்கு கொள்ள வேண்டிய ஒருவர் பூமியில் சந்தர்ப்ப வசத்தால் இறந்து போக, அவருடைய இரட்டைச் சகோதரரை பண்டோராவிற்கு அழைத்து வருகிறார்கள். பண்டோரா, நாவி என்றால் அவருக்கு என்னவென்றே தெரியாது! இறந்தவருக்கென்று வடிவமைக்கப்பட்ட அவதாரில் ஒரு மனிதர் புக வேண்டுமென்பதற்காக அவர்களை அழைத்து வருகிறார்கள். வருபவர்தான் கதாநாயகன் ஜேக் சுல்லி. ஒரு போர் விபத்தில் காலை இழந்த ஜேக், தன் அவதார் மூலம் நடக்க முடிவதால், தன் புது வேலையை மிகவும் ரசிக்கின்றார். 

ஒரு சமயத்தில் காட்டில் தனியாக மாட்டிக் கொள்ள, அவர் நாவி மக்களுடன் உறவு மேற்கொள்கிறார். நாவி மக்களின் இளவரசி நேய்த்ரியுடன் நட்பு கொள்கிறார். நேய்த்ரியின் மூலம் அவர்களின் பழக்க வழக்கங்களையும், வாழ்க்கை முறையையும் கற்றுக் கொள்கிறார். தூங்கும் சமயம் மட்டும், அவருடைய 'ஆவி' தொலைவில், ஆராய்ச்சிக் கூடத்தில் இருக்கும் அவரது மனித உடலுக்குத் திரும்பி விடும். நாவி மக்களை அம்மரத்திலிருந்து அப்புறப்படுத்துவதுதான் அவர் வேலை. 

ஆனால், இதற்குப் பிறகு கதையின் போக்கு மாறுகிறது. காலை இழந்து பூமியில் ஏதுமே செய்ய முடியாமல் இருப்பதை விட அவருக்கு நாவி வாழ்க்கை இன்னும் பிடிக்க ஆரம்பிக்கின்றது. மீதிக் கதையை நான் சொல்லப் போவதில்லை. படத்தின் சூழலையும், முதல் இருபது நிமிடங்களையும்தான் இதுவரை சொல்லியிருக்கின்றேன். மீதியை நீங்களே பாருங்கள். அதிலும் தியேட்டரில் பாருங்கள். முடிந்தால் 3Dயில் பாருங்கள்!

உண்மையைச் சொல்லப் போனால், இனி படத்தில் பெரிய கதையெல்லாம் ஒன்றுமில்லை. 'Dances with wolves', 'The Last Samurai' போன்ற படங்களை கலந்தடித்தால் அவதார் படத்தின் கதை வரும். ஆனால் அதெல்லாம் முக்கியமில்லை. இவ்வளவு ஏன், இதுவரை நான் கதாபாத்திரங்களின் பெயர்களை மட்டும்தான் சொன்னேனே தவிர, நடிகர், நடிகைகளைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. ஏனென்றால், அவர்களுக்கும் கூட அதிக முக்கியத்துவம் இல்லை. ஜேக் சுல்லியாக ஸாம் வர்திங்டன், நெய்த்ரியாக ஜோ ஸல்டானா, க்ரேஸ் அகஸ்டினாக ஸிகுர்னி வீவர் நடித்திருக்கின்றனர். 


'அவதார்' முழுக்க முழுக்க 'ஜேம்ஸ் கேமரூனின்' படம். கதாநாயகன், இயக்குனர், தயாரிப்பாளர் - எல்லாமும் அவர்தான்! ஒவ்வொரு காட்சியையும் மனிதர் அத்தனைத் துல்லியமாக செதுக்கியிருக்கின்றார். ஒவ்வொரு நிகழ்ச்சியும் 'சொல்லப்படும் விதம்' இருக்கின்றதே, அதுதான் டாப் க்ளாஸ்! எடுத்துக்காட்டிற்கு. கடைசியில் அந்தத் 'தொங்கும் மலைத்தொடர்' நடுவில் நடக்கும் அரை மணி நீள சண்டை இருக்கின்றதே, அப்பப்பா!! பார்ப்பதற்கு கண்ணாயிரம் போதாது!! ஏன், நாவிகள் வாழும் அம்மரத்தை மனிதர்கள் தரைமட்டம் ஆக்கும் காட்சியைக் கூடச் சொல்லலாம் - கல்லும் கரைந்து விடும்! 'ஜெயிப்பது மனிதர்கள்தான்' என்பதை மறந்து, நாவிகளை நினைத்து மனமொடிந்து, நாமும் கணநேரத்திற்கு நாவிகளாகவே மாறிவிடுவோம்! தியேட்டரில், பல 'ஐயோ, பாவம்' குரல்களை நானே கேட்டேன்! அத்தனை துல்லியம், அத்தனை (என்னதான் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸாக இருந்தாலும்) இயற்கைத்தனம், அத்தனை அற்புதம்!

எத்தனையோ வருடங்களுக்கு ஒரு முறை வரும், ஹேலியின் காமெட்டைப் போல, எத்தனையோ வருடங்களுக்கு ஒரு முறைதான் இது போன்ற ஒரு அற்புதம் நிகழும். அதாவது, 'அவதார்' போன்ற ஒரு திரைப்படம் வரும். அதைக் கண்டு களிப்பதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். 'அவதார்' வெற்றி அடைந்தால், இன்னும் இரண்டு 'தொடர் படங்களை' எடுப்பதாகச் சொல்லியிருக்கின்றார் ஜேம்ஸ்! அவை இரண்டையும் அவரே இயக்குவார் எனும் பட்சத்தில், அவையும் பிரம்மாண்டமாகவும், அற்புதமாகவும் இருக்கும்!!

காத்துக்கொண்டிருக்கின்றோம் ஜேம்ஸ் இன்னும் மூன்று மணி நேரம் நாவிகளோடு பண்டோராவில் வாழ்வதற்கு!!